مرحبا! மர்ஹபா! எதிஹாதின் உயர் வகுப்பு அனுபவம்…

சோபகிருது, ஆடி.
அபு தாபி வழியாக பெங்களூரில் இருந்து இலண்டன் வரை

பெங்களூர் பன்னாட்டு விமான நிலையமானது பெங்களூர் நகரத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் தேவனஹள்ளி எனப்படும் பகுதியில் உள்ளது. விமான அனுபவத்திற்கு செல்லும் முன் விமான நிலையத்தை பற்றி பார்க்கலாம்

விமான நிலையத்தின் பெயர்: கெம்பகௌடா பன்னாட்டு விமான நிலையம்

நகரம் மற்றும் மாநிலம்: பெங்களூர், கருநாடகம்.

பேசப்படும் மொழிகள்: கன்னடம், ஆங்கிலம்

சென்றடையும் நேர அளவு: இது உங்கள் இருப்பிடத்தை பொறுத்து! இரவு நேரங்களில் விரைந்து வந்தடைந்துவிடலாம் ஆனால் போக்குவரத்து நெரிசல் இருக்கும் நேரங்களில் கூடுதல் நேரம் எடுக்கும்.

விமான நிலையம் அடைய நகரப் பேடுந்துகள் உள்ளன. சுமார் 70-80 நிமிடங்கள் எடுக்கும் என கேள்விப்பட்டிருக்கின்றேன். இரவு நேரத்தில் எவ்வித போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரத்திலும் எனக்கு “கார்”இல் சுமார் ஒரு மணி நேரம் எடுத்தது.

விமான முனையங்கள்: பிரதானமாக இரண்டு முனையங்கள் இருக்கின்றது. உயர் வகுப்பில் சென்றீர்கள் என்றால் சொகுசு ஓய்வறைக்கு நுழைவு இலவசம்! எனவே விமான நிலையத்திற்கு விரைந்து வந்தாலும் பிரச்சனை இல்லை! ஓய்வறையில் வகை-வகையான இலவச சாப்பாடு, நாளிதழ்கள் என பல அம்சங்களை அனுபவிக்கலாம். ஆனால் இவ்வோய்வறையானது பாதுகாப்பு சோதனைக்கு பிறகு தான் செல்ல முடியும்.

எதிஹாத் அனுபவம்: பொதுவாக உயர் வகுப்பினரை முதலில் விமானம் ஏறவிடுவது வழக்கம். எனவே விமானத்தில் உயர் வகுப்பில் பறக்கும் போது முதலில் ஏறி நிதானமாக இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கும். விமானப் பணியாளரின் வரவேற்பு அமோகமாக இருந்தது. ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தனர் அத்தோட உணவுப்பட்டியலும் கொடுத்தனர். உனவுப்பட்டியல் அரபி மொழி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது. பெங்களூரில் இருந்து புறப்படுகின்ற காரணத்தினால் கன்னடத்திலும் வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று என்னுடையக் கருத்து.

விமானம் புறப்பட்ட பின்பு சுட-சுட, ரவா இட்லி, சட்னி-சாம்பார் கொண்டு வந்தனர். அதற்கு பிறகு தேநீர். இருக்கை நல்ல சொகுசாக இருந்தது. விரும்பினால் கால்களை நீட்டிக்கொண்டு நல்ல உறங்கலாம்! அபு தாபி- இலண்டன் விமானத்தில் கூடுதலாக உணவு அளிக்கப்பட்டது ஆனால் மற்றபடி இருக்கை, தரம் வசதி எல்லாம் பெங்ளூர் விமானம் போல தான் இருந்தது. இதில் இன்னும் என்ன ஒரு சிறப்பு என்றால் இவ்வகுப்பில் எவ்வளவு தடவை வேண்டுமோ உணவை கேட்டு வாங்கலாம்! மேலும் அபு தாபியில் எதிஹாதின் சொகுசான ஓய்வறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு சில சொகுசுக்காக பல ஆயிரம் ரூபாய் கூடுதல் கொடுக்க வேண்டுமா என்றெல்லாம் கேள்விகளும் சிந்தனைகளும் எழுவது இயல்பு தான். இருப்பினும் வாழ்க்கையில் ஒருமுறையாவுது அனுபத்தாக வேண்டியதொன்று.

மொத்தத்தில் எதிஹாதின் உயர் வகுப்பு மற்றும் சேவைகள் மிகவும் நன்றாக இருந்தது. சேருமிடத்தின் மொழிகளில் சேவைகள் வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

மதிப்பீடு: 4 நட்சத்திரம்

எதிஹாதின் சேமியா உப்புமா மற்றும் சிறிய ஊத்தப்பம்

Previous
Previous

நடைமேடை 65!

Next
Next

பாலி அனுபவம்…