Inda pathivu ungalukkaga!
பண்பாடு சிதைவா, காலத்தின் கட்டாயமா அல்லது அலட்சியமா?
ஆங்கில எழுத்துகளில் தமிழ்!
ஒரு சமுதாயத்திற்கு பல அடையாளங்களில் மொழி ஒரு அடையாளமாகும். ஒவ்வொரு மொழிக்கும் அம்மொழியின் ஒலிகளுக்கேற்ப எழுத்துகள் இருக்கும். அச்சமுதாயம் அவர்களின் தாய்மொழியை கற்றுகொள்ளும் போது இயல்பாகவே ஒலிகளுடன் அம்மொழிக்குண்டான எழுத்துகளைதான் கற்றுகொள்வர். பெரும்பாலானத் தமிழர்களும் அவ்வாறே என சொல்லலாம். ஆனால் கடந்த சில வருடங்களாக ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதுவதை நான் அதிகளவில் கவனித்து வருகின்றேன். இந்த பழக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் செய்தால் புரிந்துகொள்ளலாம். அப்போவும் அது தவறு என்று தான் நான் சொல்லுவேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கலால் செய்யப்பட்டலும் அது தவறே. அப்போ தமிழ்மொழி தமிழ் எழுத்துருவத்தில் தான் எழுத்தப்பட வேண்டுமா? இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் எழுத்துருவம் மற்றும் அதை சார்ந்த அரசில் மற்றும் வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம். பேச்சு மொழி ஒலி சார்ந்தவை. அதாவுது பேசும் போது நாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்- அதாவுது தூய தமிழில் பேசலாம், தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசலாம், இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசலாம், தெலுங்கும் கன்னடமும் கலந்து பேசலாம், கொரியனும் ஆங்கிலமும் கலந்து பேசலாம் ஆனால் எழுதும் போதுதான் எழுத்துருவம் நமக்கு தேவைப்படுகின்றது. உலகத்தில் பல மொழிகளுக்கு எழுத்துருவம் கிடையாது என்பதையும் நாம் நினைவில் வைத்துகொள்ளவேண்டும். எழுத்துருவம் இல்லாத மொழிகள் அனைத்தும் வாய்வழியாக அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதில் ஒரு சில ஒழுக்கங்கள் கடைப்பிப்பட்து அவசியம். கடந்த காலங்களில் பல சமுதாயங்கள் பல்வேறு காரணிகளுக்காக எழுத்துருவத்தை மாற்றியிருக்கின்றனர். எடுத்துக்காட்டிற்கு உஸ்பெக் சமுதாயம் லத்தீன் எழுத்துருவத்தை பயன்படுத்துகின்றது. இவ்வாறு செய்வதின் மூலம் அச்சமுதாயத்தின் பல நூற்றாண்டின் இலக்கியங்கள் வருங்காலத்தலைமுறையினர் படித்தறிந்துகொள்ள முடியாமலே போகிவிடும்.
தமிழகத்திலும் பல தமிழர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. சொந்த ஊரில் பிறந்து வளர்ந்து அப்பகுதியின் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள சமூகம் அம்மொழியையே எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லும் போது தான் பிரச்ச்னைகள் உருவாகுகின்றன. இதற்கு வெளி மாநிலத்திலிருந்து வருபர் காரணம் இல்லை, மாறாக தமிழர்களே காரணம் என்று சொல்லலாம். ஆனால் இதை தொழில்நுட்ப ரீதியாக பார்த்தோமென்றால் 1980களில் கணினி மற்றும் தொழில்நுட்பம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அக்காலக்கட்டத்தில் இலத்தீன் எழுத்துருவம் மற்றும் வேறு ஒரு சில மொழிகளின் எழுத்துருவம் மட்டுமே பயன்படுத்த நிலையில் இருந்தது. அதன் பின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய- அடைய இன்று நமக்கு அந்த சிக்கல் இல்லை. இன்று நாம் தமிழ் மொழியை தமிழ் எழுத்துருவத்தில் உலகெங்கும் பயன்படுத்தலாம். மாறியிருன்ற சூழலில் நாம் இன்னும் “தமிழ் உள்ளீடு செய்ய தெரியாது” “தமிழ் எழுத படிக்க தெரியாது” போன்ற சாக்கு-போக்குச் சொல்லி நம்பள நாமே ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றோம் என்ற கருத்துக்கு வழிவகுக்கின்றது.
நான் அடிக்கடி கேட்கின்ற மற்றொரு காரணம் என்னவென்றால் “தமிழ் படிக்க கடினமாக இருக்கு. அதுனால ஆங்கிலத்தில் தமிழ் எழுதினால் படிக்க எளிதாக இருக்கும்” இன்னொரு சில பேர் என்ன சொல்லி கேட்டிருக்கேன் என்றால் “யாருமே தூயத் தமிழ் பெசற்து கிடையாது. அதுனால இலத்தீன் எழுத்துருவத்தில் எழுதினால் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுத வசதியாக இருக்கும்!’. தனிப்பட்ட முறையில் இவற்றில் எந்த ஒரு காரணி அல்லது காரணமும் ஏற்புடையது அல்ல. என்னைப் பொறுத்த வரையில் இலத்தின் எழுத்துவரத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும்கூட இரண்டு முக்கிய காரணங்கள் என்னால் கொடுக்க முடியும்:
முதலாவுது: மரபு மற்றும் மரபு சார்ந்த இலக்கியங்களை தொலைக்க வாய்ப்புள்ளது.
இரெண்டாவுது: அவ்வெழுத்துருவத்திற்கென விதிமுறைகள் கிடையாது. எடுத்துக்காட்டிற்கு:
Puli (இது, புலி என்று படிக்க வேண்டுமா அல்லது புளி என்று படிக்க வேண்டுமா?), malai(மலையா, மாலையா இல்ல மழையா?), kadal (இதை கடலென்னும் படிக்கலாம், காதல் என்று படிப்பவர்களும் இருக்கிறார்கள்)
இப்படி சொற்கள், தொடர்கள் மற்றும் வேறுப்பட்ட புரிதல்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.
தாய் மொழியை சொந்த இடத்தில் பயன்படுத்த சட்டங்கள் தேவை இல்லை, பற்று இருந்தால் போதும். தமிழ் நாட்டில் கடைகளின் பெயர் பலகை பெரிதாகவும் தெளிவாகவும் தமிழில் எழுத்தப்பட வேண்டும் என்ற அரசாணையிடுகிறது என்றால் நாம் நம்முடைய தமிழ்ப்பற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில் தான் பேசியாக வேண்டும் தமிழில் பேசக்கூடாது என்கிற எழுதப்படாத சட்டம் இருக்கும் போது எத்தனை சுதந்திர தினம் கொண்டாடினாலும் மனதளவில் சுதந்திரம் பெறவில்லை என்பதுதானே பொருள்? வணிக மயமாகும் உலகத்தில் எட்டு கோடி மக்கள் தொகைகொண்ட தமிழினத்தால் ஏன் தமிழை வணிக மொழியாக மாற்றியமக்க முடியவில்லை? இது ஒரு சமூகப் பொறுப்பென்றாலும் இதில் ஒவ்வொரு தமிழனுக்கும் பங்குண்டு. மற்றொரு தமிழருக்கு குறுஞ்செய்தி அனுப்பவதிலிருந்து, தமிழ் நாளிதழ் வாசிப்பது, நூல்களை வாசிப்பது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது போன்று எல்லாந் துறைகளிலும் தமிழை தமிழர்கள்தான் பயன்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் நம் மொழி வலுவடையும். நாமே எழுதுருவத்தை மாற்றிப் ப்யனடுத்தத் தொடைங்கினால் நாம் மொழி மரபு மற்றும் பண்பாடு சிதைவுக்கு துணைபோகிறோம் என்று தான் பொருள் கொள்ள முடியும்.
உங்கள் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளை அன்புடன் வரவேற்கின்றேன்!